10:15 pm - Thursday March 23, 2017

பசு-கன்னுக்குட்டி

BN-GB213_pakatt_P_20141217060743

Pic source: wsj

கடவுளின் முன்னிலையில்
கணவரைக் கைப்பிடுத்து
கன்னிக்கு விடைக்கொடுத்து
கர்ப்பத்தில் ஏந்தினேன்
கரு ஒன்றை..

முகம் தெரியா எனதுயிரை
கற்பனையில் சிறைப்பிடித்து
முற்பொழுதும் கவனமாய்
காத்து வந்தேன்

பத்து திங்கள் தவமிருந்து
முத்து போன்ற எனதழகை
பத்திரமாய் ஈன்றெடுத்தேன்

பெத்தெடுத்த வலிக்கூட
பஞ்சு போல பறந்ததே-எந்தன்
பிஞ்சு மகன் கொஞ்சி கொஞ்சி
அழுகையிலே

வாய் நிறைய கூப்பிடவே
தேடி தேடி பெயர் வைத்தேன்..
வாழ்க்கை முழுதும் என் மகன்
பேரெடுத்து வாழ்ந்திடவே..

அவன் மழலை மொழியில் பேசயிலே-எந்தன்
மரணம் கூட தயங்கிவிடும்
அவன் மெதுவாய் எழுந்து நடக்கையிலே
இந்த அகிலம் அசைந்த உணர்வுவரும்

ஒவ்வொரு நொடியும் நான் இரசித்து
பல கனவு கோட்டை கட்டி வந்தேன்
கல்வி ஒன்றே காக்கும் என்று
பள்ளிக்கூடம் அனுப்பி வைத்தேன்
பட்டதாரி ஆகும் முன்பே-இன்று
பாடையில் நீயும் படுத்ததேனோ?

பிஞ்சு போன்ற உனதுடலில்
குண்டு பாய்ச்சி உயிரெடுக்க
என்ன தவறு நீ இழைத்தாய்?
எந்தன் முன்னே நீ இறந்தாய்..
என்னை உன்னுடன் சேர்த்தழைத்தாய்..

பால் குடிக்க கன்று இல்லை
மடியிருந்து என்ன பயன் !

ஓவியா ஓமாபதி
-தைப்பிங்-
பேசும் கவிதைகள்-

Filed in: தமிழ் அரங்கம்

No comments yet.

Leave a Reply